சென்னை:இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இன்று (ஜூன் 20) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
முக்கியமாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து நாளை (ஜூன் 21) வடதமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், தென்தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தொடர்ந்து நாளை மறுநாள் முதல் வருகிற 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரமணி ஏஆர்ஜி (சென்னை) ஆகிய இடங்களில் தலா 8 சென்டி மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சிதம்பரம் ஏடபிள்யூஎஸ் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை) போன்ற இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதேபோல், சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), புவனகிரி (கடலூர்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை) மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.