சென்னை:சென்னையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் சுரங்கம் மற்றும் உயர்மட்டப் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியானது, 3 வழித்தடங்களிலும் சேர்த்து, 4.33 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கம் பணி கடந்துள்ளது. அதாவது 10 சதவீத தூரம் சுரங்கம் பணி கடந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கிமீ) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கிமீ ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கிமீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த 3 வழித்தடங்களில் தற்போது பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிமீக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேபோல, 76 கி.மீ. உயர்மட்டப் பாதையில், 80 ரயில் நிலையங்களும், மேலும் இந்த வழித்தடங்களில் 2 மெட்ரோ பணிமனையும் அமைக்கபட்டு வருகிறது. இந்த பணிகள் எல்லாம் 2026க்குள் முடிக்க திட்டமிடப்படுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், சுரங்கம் தோண்டும் பணிகளும், சென்னையில் இருந்து புறநகருக்குச் செல்லும் வழியில் உயர்மட்டப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. 3வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
கலங்கரை - பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விரைவில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலைப் பகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு பெயர்கள்:சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை இடைய சுரங்கம் பணி தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு சிறுவாணி என்று பெயர் வைத்துள்ளனர். இதேபோல், சேத்துப்பட்டு தெற்கு - ஸ்டெர்லிங் சாலை - பாலாறு, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - பவானி, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - தாமிரபரணி என்ற ஆறுகளின் பெயர்களை வைத்துள்ளனர்.