தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பட்டால், பொதுமக்கள் தவித்துவருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. சென்னையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைபடுகின்றது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் தினமும் 525 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மக்களே, தண்ணீர் பிரச்னை குறித்து இங்கே புகார் செய்யுங்கள்
சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க சென்னை குடிநீர் வாரியம் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு அரசு ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 2.5 மில்லியன் லீட்டர் வீதம் நான்கு முறை ரயில் மூலம் சென்னைக்கு 10 மில்லியன் லீட்டர் தண்ணீர் கொண்டு வருகிறது. இருந்தாலும், பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சென்னை குடிநீர் வாரியம்,
”சென்னை மக்களுக்கு வணக்கம், உங்களது குறைகளை எங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவதற்கு முன் https://chennaimetrowater.in/login.html என்ற தளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், அந்த புகார் ஒருங்கிணைந்த புகார் மையத்திற்கு சென்று உங்கள் குறைகளுக்கு துரித முறையில் தீர்வு காணப்படும்” என கூறியுள்ளது. சென்னையில் பருவமழை விரைவில் தொடங்கினால் மட்டுமே சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்னை ஓரளவிற்கு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.