சென்னை:மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் தொடங்கியது. இந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு, வழித்தடம் 1 மற்றும் 2இல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் IIஇல் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் வழித்தடம் 3இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் சுரங்கம் தோண்டும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (பிப்.16) சென்னை கிரீன்வேஸ் சாலை நிலையம் அருகில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் II, வழித்தடம் 3இல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், கிரீன்வேஸ் சாலை நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.