தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயில் திட்டம் - மாதவரம் பால் பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் தொடக்கம்

மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ) சுரங்கப்பாதை வழித்தடப்பகுதி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாதவரம் பால் பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

chennai
chennai

By

Published : Oct 13, 2022, 8:05 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், 118.9 கி.மீ நீளத்திற்கு 3 வழித்தடங்கள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், மாதவரம்- சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை (26.1 கி.மீ), மாதவரம் - சோழிங்கநல்லூர் (47.0 கி.மீ) ஆகிய 3 வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மாநில அரசின் திட்டமாக கருதி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 52.01 கி.மீ வழித்தடப்பகுதிக்கும், ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை எஞ்சியுள்ள 66.89 கி.மீ வழித்தடப்பகுதிக்கும் நிதியுதவி வழங்குகின்றன. தமிழ்நாடு அரசின் நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், உயர்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 7 ஒப்பந்தங்கள், சுரங்கப்பாதை வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 10 ஒப்பந்தங்கள், மாதவரம், பூந்தமல்லி பணிமனைக்களுக்காக 2 ஒப்பந்தங்கள், இருப்புப்பாதை அமைப்பதற்காக 5 ஒப்பந்தங்கள் என மொத்தம் 24 ஒப்பந்தங்கள் அடங்கும்.

24 கட்டுமான ஒப்பந்தங்களில், இதுவரை 15 ஒப்பந்தங்களுக்கு ஏற்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர அமைப்புகளை நிறுவுவதற்கான 36 ஒப்பந்தங்களில், இதுவரை 2 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழித்தடம் 3-ல் மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ) சுரங்கப்பாதை வழித்தடப்பகுதி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் பால் பண்ணையிலிருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்பு சுற்றுச் சுவர்கள் (Diaphragm Wall) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான சுற்றுத் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப்பாதைக்கான கான்கீரிட் வார்ப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் பால்பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று (அக்.13) தொடங்கப்பட்டுள்ளன. மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து, மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ., நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் நடக்கும் உலக அழகிப்போட்டி - பங்கேற்க புறப்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி

ABOUT THE AUTHOR

...view details