கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ரயில்களின் பயண நேரம் குறித்த தகவல்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " செப்டம்பர் ஏழாம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். பின்னர் தேவைக்கு ஏற்ப சேவை நேரம் நீட்டிக்கப்படும். சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல நிற வழித்தடத்தில் 7ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்படும்.
அதேபோல், பரங்கிமலையிலிருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் 9ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் வழித்தடத்திற்கும், விமான நிலைய வழித்தடத்திற்கும் இடையே ரயில் சேவைகள் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.