சென்னை:சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற மார்ச் 19ஆம் தேதி, தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதனால் மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி (அன்பின் சிறகுகள் - Wings of Love) வருகிற மார்ச் 19ஆம் தேதி இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதால், இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெற உள்ள மார்ச் 19ஆம் தேதி இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், அன்று மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மார்ச் 19ஆம் தேதி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மெட்ரோ ரயில்களில் வரும் மெட்ரோ பயணிகள், கியு ஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் (Travel Card) பயன்படுத்தி 20 சதவீத கட்டணத் தள்ளுபடியை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை மார்ச் 19ஆம் தேதி டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் (விமான நிலைய மெட்ரோ - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ - பரங்கிமலை மெட்ரோ) கடைசி ரயில் வருகிற 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி முழுக்க முழுக்க சூஃபி இசையால் (Sufi Music - பாரம்பரிய அல்லது ஆன்மீகம் கலந்த இசை) நடத்தப்பட உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்கள் இடம் பெறாது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் ஜாவேத் அலி மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க:கோவையில் ஜி.வியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இசை நிகழ்ச்சி