சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில், முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. 50க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?
இதில் 43.1 கி.மீக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், 76 கி.மீ உயர்மட்ட பாதையில், 80 ரயில் நிலையங்களும், மேலும் இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனையும் அமைக்கபட்டு வருகிறது. இந்த பணிகள் எல்லாம் 2026க்குள் முடிக்க திட்டமிடப்படுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரயில் பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 25 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை:2015 முதல் 2018 வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019ஆம் ஆண்டில் 3 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பயணிகளும், 2020ஆம் ஆண்டில் 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 982 பயணிகளும், 2021ஆம் ஆண்டில் 2 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 383 பயணிகளும், 2022ஆம் ஆண்டில் 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பயணிகளும் பயணித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு மட்டும் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள். இவ்வாறு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மொத்தம் 25 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 72 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் எதையும் செய்யவில்லை - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!