தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Whatsapp Metro Ticket: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்! - சென்னை மெட்ரோ நிர்வாகம்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள், வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

Introducing
வாட்ஸ்அப்

By

Published : May 17, 2023, 7:06 PM IST

சென்னை: கோடை வெயில் வாட்டி வருவதால், சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல், வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கவலை இல்லாமல், ஏசி வசதி கொண்ட மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்கள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. மெட்ரோ பயணிகள் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய சித்திக், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளோம். இன்று, அனைத்து மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் பயணச்சீட்டு வசதியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

பயணிகள் இப்போது தங்கள் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இடைமுகத்தில் இருந்து தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம், கட்டணங்களைச் சரிபார்க்கலாம் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளைப் பெறலாம். மேலும், இது பயணிகளுக்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயணச்சீட்டை வாங்கினால் 20 கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான வசதி அனைத்து பயணிகளுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. இந்த சேவையைப் பயன்படுத்த, மெட்ரோ பயணிகள் 8300086000 என்ற எண்ணுக்கு "HI" என்று அனுப்ப வேண்டும்- அல்லது க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தல், கட்டணம் அல்லது வழித்தடங்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்தல் போன்ற பல்வேறு வசதிகளை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.

வாட்ஸ்அப் பயணச்சீட்டு சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

1.ஒற்றைப் பயணம் மற்றும் குழு பயணத்திற்கு க்யூஆர் பயணச்சீட்டு கிடைக்கும். குழு பயணச்சீட்டில் அதிகபட்சம் 6 பயணிகளுக்கான டிக்கெட்டை பெறலாம்.

2. க்யூஆர் பயணச்சீட்டை வாங்கிய அதே நாளில் மட்டுமே பயன்படுத்த முடியும். பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே வந்ததும், பயணிகள் சேருமிடத்திற்கு 120 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்.

3. அதே நிலையத்தில் இருந்து வெளியேற, பயணிகள் நுழைந்த நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்.

4. வணிக நேரங்கள் முடிந்த பிறகு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

5. வாட்ஸ்அப் பயணச்சீட்டு முறையில் பயணச்சீட்டை ரத்து செய்ய அனுமதி இல்லை.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் இந்தியா- இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம்!

ABOUT THE AUTHOR

...view details