சென்னை:சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 119 கிலோமீட்டர் தொலைவுக்குப் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி ஆகிய தடங்களில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது வழித்தடம் 3, 4 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மிக முக்கிய தேவையான சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பு அவசியமாகிறது என்றும், இந்த அதிநவீன தொழில்நுட்பத்திற்கான கருவிகள் 1,620 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க, ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.1,620 கோடி மதிப்பில், சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து, உற்பத்தி செய்து, நிறுவி, சோதித்து செயல்படுத்துதல் போன்றவற்றிற்கு ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ், எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, ரயிலை ஓட்டுநரின்றி தானாகவே இயங்க வழிவகுக்கிறது.