சென்னை:போரூர், வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முடிக்கப்பட உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (அ க்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,000 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை, மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தனியார் ஒப்பந்ததாரரான நிறுவனத்தின் மூலம் சாலை சீர்செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.