சென்னை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்-15 )தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்ததாவது," காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க:நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மழை பதிவு: இன்றைய நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டம் க.ஆலங்குடியில் 5 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 4-செ.மீ மழையும் பதிவானது. ஏற்காடு (சேலம்), இரணியல் (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மயிலாடி (கன்னியாகுமரி), சின்னகள்ளார் (கோயம்புத்தூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), குருங்குளம் (தஞ்சாவூர்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தொடர்ந்து கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்!