சென்னை: நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் திடீர் மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக எழும்பூர், சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், கொளத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் அண்ணாசாலை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச்.17) முதல் மார்ச் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.