தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்! - Tamilnadu rain

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 29ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

By

Published : Jan 27, 2023, 3:50 PM IST

சென்னை:தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(ஜன.27), நாளையும்(ஜன.28) வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் குறைவாக இருக்கக்கூடும்.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஜன.27) காலை 05:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, காலை 08:30 மணிக்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஜன 31ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதியைச் சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக, வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன 29ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன 30ஆம் தேதி ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன 31ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்சமாக 22 டிகிரி வரையும் இருக்கக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று (ஜன.27) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ABOUT THE AUTHOR

...view details