தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department said 13 districts of Tamil Nadu are likely to receive rain due to the low pressure zone
Chennai Meteorological Department said 13 districts of Tamil Nadu are likely to receive rain due to the low pressure zone

By

Published : May 8, 2023, 3:02 PM IST

சென்னை:தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (மே8) காலை உருவாகியுள்ளது.

இது 9ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும். இது வடக்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்குத் திசையில் திரும்பி, வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மே8) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 9ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே.8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று(மே8) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மே.9ஆம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மே 10, 11ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மே 12ஆம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 08.05.2023 தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: +2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி!

ABOUT THE AUTHOR

...view details