சென்னை: மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் தமிழகத்தில், 4 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்புள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னல் மிதனமான மழைக்கு வாய்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
24 மணி நேரத்தில் பதிவான மழை: புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழையும், களியல் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), நாகுடி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), மணியாச்சி (தூத்துக்குடி), மாதவரம் AWS (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.