சென்னை:மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.
வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (டிச.05) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், “தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல், இன்று காலை தென் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும், மச்சிலிப்பட்டினத்துக்கும் இடையே கடுமையான புயலாகக் கரையைக் கடக்கும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் ஏற்படுத்திய சேதங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழிலன், கருணாநிதி, பரந்தாமன் மற்றும் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.