மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், இருசக்கர வாகனம் நிறுத்த மெட்ரோ ரயில் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இரு சக்கர வாகனங்களுக்கான மல்ட்டி லெவல் பார்க்கிங் வசதியை தனியார் நிறுவனத்தின் துணையோடு சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 5 இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு மல்ட்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐந்து வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடத்தில் மேலே மற்றும் கீழே என மொத்தம் 10 வாகனங்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை தொடங்கி வைத்த மெட்ரோ ரயில் இயக்குனர் நரசிம்ம பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த மல்ட்டி லெவல் பார்க்கிங் மக்கள் பயன்பாட்டிற்காக மூன்று மாதங்கள் செயல்படும். எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பிருந்தால் அதிகப்படியான மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்" என்றார்.