சென்னை: கேரளாவை பூர்விகமாக கொண்டு திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் அய்யாசாமி தெருவில் வசித்து வந்தவர் மோகன்(69). இவர் கூலி வேலை செய்துவந்த நிலையில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த வகையில், ஜனவரி 2ஆம் தேதி திருவல்லிக்கேணி ரயில் நிலையம் அருகே மோகன் மது அருந்திகொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவர் மோகனிடம் மதுவை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது மோகன் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் கீழே கிடந்த மதுபாட்டிலை எடுத்து மோகனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மோகனை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை தாக்கிய விருத்தாசலம் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரனை(30) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மகேந்திரன் மீது காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்த கேரள அமைச்சர்