சென்னை:தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடில் உள்ள ஏராளமான கிளப்கள் மற்றும் ஹோட்டல்கள் அரசு விதித்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல இயங்கி வருவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேஷ் பாபு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த மனுவில், கிளப்கள், ஹோட்டல்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்களை விற்று வருவதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து போலீஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் கீழ் உள்ள நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுள்ள கிளப்கள், ஹோட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் எனவும், விதியை மீறி செயல்படும் கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.