சென்னை மதுரவாயல் கிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் உதயராஜ் (26). இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரைக் கடந்த 19ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல் துறையினர், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது உதயராஜ் கூறியதாவது, "கடந்த 16ஆம் தேதி சமூக வலைதளங்கள் மூலம் வேலை தேடிக்கொண்டிருக்கும்போது லொக்காண்டோ என்ற செயலியை தரவிறக்கம் செய்து, அதில் வேலை வாய்ப்பு குறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென ஒரு எண்ணிலிருந்து பிரியா என்ற பெண் ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார்.
அவர் என்னிடம் பெண்ணின் புகைப்படம் உள்ளது, அனுப்ப வேண்டுமென்றால் 100 ரூபாய் அனுப்புமாறு கேட்டார். ஆனால் வேண்டாம் என அழைப்பைத் துண்டித்துவிட்டேன். பின்னர் பல எண்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு தொல்லை செய்ததால் 100 ரூபாயை செயலி மூலமாக அனுப்பினேன். பின்னர் ஆபாச வீடியோ அனுப்ப வேண்டுமென்றால் 1500 ரூபாய் அனுப்ப வேண்டும் என்று தொல்லை கொடுத்தார்.
நான் பணம் தரமுடியாது என்று கூறினேன். அதற்கு பணம் அனுப்பவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவதாக மிரட்டினார். இதனால் அவரது அனைத்து எண்களையும் பிளாக் செய்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து என்னுடைய எண்ணையும், எனது பெயரையும் போட்டு டிஜிகாப் செயலியில் புகார் ஒன்றை பதிவு செய்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பினார். அது மட்டும் தான் எனக்கு தெரியும்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தன்னை மிரட்டி, போலியான புகாரை அளித்து பணத்தை பறிக்க முயன்ற அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை ஏற்று விசாரணையை தொடங்கிய மயிலாப்பூர் காவல் துறையினர், பொய்யாக பெண் குரலில் பேசி பணத்தைப் பறிக்க முயன்ற திருநெல்வேலியைச் சேர்ந்த வள்ளல் ராஜ்குமார் ரீகன் (27) என்பவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கடலூரில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நிறைவு