MGR Birthday: சென்னை: எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர், எம்.ஜி.ஆர். என நாடு அறிந்ததே. அதன் காரணமாக அரசியல் கட்சியினர் உள்பட பலர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. அதிமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், பொது மக்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் இலவச உணவு வழங்கப்பட்டது.
ஏறத்தாழ 5ஆயிரம் பேர் நலத் திட்ட உதவிகளை பெற குவிந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழாவுக்குப் போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படாத விரக்தியில் கொத்தவால்சாவடி எம்.5 காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தை கலைக்க காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள், முதியவர்கள் என பாராமல் அனைவரையும் பிடித்து கீழே தள்ளிவிடுவதும், முதியவரை எட்டி உதைப்பதுமாக உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மோசமான அணுகுமுறையில் நடந்து கொண்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.