வெள்ளக்காடாக மாறிய கொரட்டூர் சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் வருவான 'மிக்ஜாம் புயல்' காரணமாக பல்வேறு மாவட்டங்களில் டிச.2 முதல் அதிக கனமழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களான சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மாநகரின் பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இதனால், மக்கள் அன்றாட பணிகளுக்கு கூட வெளியே வர முடியாமல் கடுமையான இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
இதற்கிடையே, அந்தந்த மாநகராட்சி சார்பில் மோட்டார்களைக் கொண்டு தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு கடந்து சென்றாலும் அதன் பாதிப்புகளிலிருந்து பல பகுதிகள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
மிக்ஜாம் புயலின் எதிரொலியாக சென்னை கொரட்டூர் பகுதியைச் சார்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் முதல் சிறியவர் வரை தவித்து வருகின்றனர். மழைநீரோடு கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக கொரட்டூர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வடக்கு, மத்திய, கிழக்கு நிழற்சாலைகள் பேருந்து செல்லும் சாலைகள் அதிகளவில் மழை நீர் தேங்கி உள்ளது. பக்தவத்சலம் பள்ளி, விவேகானந்தா பள்ளி ஆகியவற்றை சுற்றியுள்ள தெருக்களில் மழை நீர் 2 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் வசதி இல்லாமல் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பணிகள் மேற்கொண்டாலும் துரிதமாக செயல்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுயுள்ளனர்.
இதையும் படிங்க:மழை நின்று மூன்று நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வெளியேறாத வெள்ள நீர்!