சென்னை தற்காப்பு கலைப் பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அண்ணா நகர்ப்பகுதியில், தற்காப்பு கலைப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தவர், கெபிராஜ். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மசேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதி நேர தற்காப்புக் கலைப் பயிற்சியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் சில பள்ளிகளிலும் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். பயிற்சி பெறும் பல மாணவிகளைப் போட்டிக்காக பல மாவட்டங்களுக்கு கெபிராஜ் அழைத்துச்செல்வது வழக்கம்.
அந்த வகையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியை ஜூடோ போட்டிக்காக நாமக்கல் மாவட்டத்திற்கு கெபிராஜ் காரில் அழைத்துச் சென்றுவிட்டு, வரும் வழியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் கெபிராஜ் மீது பாலியல் தொந்தரவு உட்பட 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த 30ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்காப்பு கலைப் பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் - CPCID DGP Tripathi order
10:59 June 04
இந்த நிலையில் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலியல் புகாரளித்த பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், எல்லைவிட்டு எல்லை சென்று விசாரிக்க சிரமம் என்பதாலும்,அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் சம்பவம் நடந்திருப்பதாலும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதேபோல் வேறு பயிற்சி மாணவிகளிடம் கெபிராஜ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி துறையினர் காவல் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: என் மின்னஞ்சலை ஹேக் செய்ய திட்டமிடுகிறார் - காவல் நிலையத்தை நாடும் நடிகை!