தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது மாநில மனித உரிமைகள் ஆணையம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை பாலியல் குற்றச்சாட்டு குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணை பிரிவு அதிகாரிகள் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் கல்லூரி நிர்வாகிகளிடம் இன்று விசாரணை நடத்தினர்.

Kalakshetra College administrators interrogated by State Human Rights Commission investigation unit officials
கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகிகளிடம் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

By

Published : Apr 11, 2023, 2:40 PM IST

சென்னை:திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அந்த கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையில்லை என கல்லூரி நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதனைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டார். மேலும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரடியாகவும் விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மாணவிகள், பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தொடர்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டத்தின் போது பேராசிரியர் ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி இடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கல்லூரியின் முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் தனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை துவங்கிய நிலையில் ஹரிபத்மன் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் ஆகியோர் நேற்று ஹரி பத்மனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும் மற்றும் மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து கலாஷேத்ரா விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. நான்கு ஆசிரியர்கள் மீது மாணவி அளித்த புகாரின் பேரில் நாளிதழில் வெளியான செய்தியை வைத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவின் சார்பில் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் டிஎஸ்பிக்கள் குமார், சுந்தரேசன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தங்கமணி எஸ்ஐ உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் கலாசேத்ரா கல்லூரி இயக்குனர் ரேவதி ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தனர். விசாரணை முடித்துக் கொண்டு கல்லூரியில் இருந்து கிளம்பினர். மேலும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக மாணவிகளிடம் அடுத்த வாரத்தில் விசாரணை செய்யவும் திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள கூடை பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்ற திட்டம் - மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி அவசர கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details