சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் தெரிவிக்கையில், "இந்திய குடியுரிமை சட்டத்தில் எந்த இடத்திலும் இந்தியர்கள் பற்றி பேசவில்லை. இந்துக்கள் எங்கு துன்புறுத்தலுக்கு ஆளானாலும் அவர்கள் இங்கு தாய் நாட்டுக்குத்தான் வர வேண்டும். ஆனால் இதை இஸ்லாமியர்களை வேண்டுமென்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக போன்ற கட்சிகள் தூண்டிவிட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் மதம் நல்லிணக்கத்தையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்க திமுக நாளை பேரணி நடத்தவுள்ளது. தற்போது எங்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தமிழர்கள் குடியுரிமை சட்டத்தை வரவேற்கின்றோம் என்பதைக் காட்டுவதற்குத்தான்.
மேலும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என கூறிவிட்டு தற்போது வங்கதேச நாட்டிற்கு குடியுரிமை கேட்டு இரட்டை வேடம் போடுகின்றன. அனைத்தும் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கிகளை குறிவைத்து செய்துவருகின்றனர்.