சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு ஏற்படும் மனநல அழுத்தத்தின் காரணமாக 5 பேர் சமீபத்தில் தற்காெலை செய்து கொண்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவரும் தற்கொலை செய்துகொள்ளும்போது, ஒவ்வொரு விதமான காரணங்கள் தெரிய வருகிறது. குறிப்பாக கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மாணவர்களையும் வெகுவாக மனரீதியாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் தற்கொலையைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ''மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க behappy.iitm.ac.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக மாணவர்கள் தங்களுடைய மன ரீதியான குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தெரிவித்து ஆலோசனைகளைப் பெறலாம். மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ஐஐடியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மன நல ஆலோசகர்களின் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம்.
மாணவர்கள் தற்கொலை ஒவ்வொன்றுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன. அதனை ஆய்வு செய்து தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஐடியின் பேராசிரியர்கள் அல்லாமல் வெளியில் இருந்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள பிரச்னைகள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதன் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.