கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட நான்கு பேராசிரியர்களையும் காவல் துறையினர் பிணையில் வராதபடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், ஐஐடியில் தொடர்ந்து சாதி, மத ரீதியிலான மரணங்கள் நடப்பது தொடர்பாக விசாரணை நடத்த ஐஐடி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பாக சென்னை ஐஐடி வளாகம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
இதற்காக அங்கு வந்த போராட்டக்காரர்களை அனுமதியின்றி போராடியதற்காக காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, குண்டுக்கட்டாக கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐடி வளாகம் முன்பு, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை ஐஐடி வளாகத்திற்குள் வந்தவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.