சென்னை:சென்னை ஐஐடியின் சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்தின் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆராய்ச்சி மாணவி நிஜினா நாசர் ஆகியோர் இணைந்து தயார் செய்த, ‘தமிழ்நாட்டில் நடைபெறும் தற்கொலையால் சமூக - பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள்’ குறித்த ஆராய்ச்சி அறிக்கையை, இன்று (மார்ச் 15) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த ஆய்வு அறிக்கை குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 19 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசிற்கு இழப்பைக் கணக்கிட்டு, அரசிற்கு அறிக்கை அளித்துள்ளோம். ஒரு இளைஞர் குறிப்பிட்ட வயதில் இறந்து விடுகிறார். அவர் இறக்காமல் இருந்திருந்தால், சமூகத்திற்கு எந்த அளவிற்கு பங்களிப்பை வழங்கி இருப்பார் என்பதை கணக்கிட்டு அறிக்கையாக அளித்துள்ளோம்.
அறிக்கையின் மூலம் பணப் பற்றாக்குறைக்கும், பொதுமக்கள் தற்கொலை குறித்து பேசி வேறுத் திட்டங்களை கொண்டு வருவதற்கான முதல் கட்டமாக இதனைக் கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாட்டில் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை சாலை விபத்தில் இறந்துள்ளனர். இதற்காக உலக அளவில் பெரிய திட்டமாக ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்பித்தது. அதில் விபத்து நடப்பதை தவிர்ப்பதற்கு அதிகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த பின்னரும் சிகிச்சைக்கான வழிமுறைகளும் இருக்கிறது. தற்கொலையை தடுப்பதிலும், ஒருங்கிணைந்த திட்டத்தைக் கொண்டு வந்து, 19 ஆயிரம் இறப்புகளை தவிர்த்து தற்கொலை இல்லாத நிலையை எட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும். அதனையும் மீறி தற்கொலை செய்து கொண்டவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என பரிந்துரை வழங்கி உள்ளோம்.