சென்னை: அமெரிக்காவில் உள்ள தேசியப் பொறியியல் அகாடமிக்கு (National Academy of Engineering - NAE) புதிதாக 18 சர்வதேச உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆர்.ஐ.சுஜித்தும் சர்வதேச உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொறியியல் துறையில் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், பொறியியல் அமைப்புகளில் உள்ள உறுதியற்ற தன்மைகளைப் புரிந்துகொண்டு இயக்கவியல் அமைப்புகளில் அவற்றைப் பயன்படுத்துவது, கட்டுப்படுத்துவது குறித்த பங்களிப்பிற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சென்னை ஐஐடி விண்வெளிப் பொறியியல் துறையில் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும், 'Critical Transitions in Complex Systems' பற்றிய ஆய்வுக்கான உயர்சிறப்பு மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இதுகுறித்து பேராசிரியர் ஆர்.ஐ.சுஜித் கூறும்போது, "தேசியப் பொறியியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவின் தேசியப் பொறியியல் அகாடமிக்குத் தேர்வு செய்யப்படுவது என்பது பொறியாளர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தொழில்முறை அங்கீகாரம்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியின் குளோபல் எங்கேஜ்மெண்ட் டீன் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, "பேராசிரியர் சுஜித் சென்னை ஐஐடிக்கு எந்த அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றி உள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். அவரது தலைமையில் 'Critical Transitions in Complex Systems' பற்றிய ஆய்வுக்கான உயர்சிறப்பு மையத்தை இந்தக் கல்வி நிறுவனம் அமைத்துள்ளது. பேராசிரியர் சுஜித் தலைமையிலான குழுவினர் உயர்சிறப்பு மையத்தின் மூலம் உலகத் தரம் வாய்ந்த பணிகளை தொடர்ந்து அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
2003-07ஆம் ஆண்டுகளில் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகப் பதவி வகித்த பி.என்.சுரேஷ், தேசிய பொறியியல் அகாடமியின் விண்வெளிப் பிரிவுக்குத் தேர்வானார். அதற்கடுத்து 2-வது இந்தியராக சுஜித் தற்போது தேர்வுபெற்றுள்ளார்.
பொறியியல் ஆராய்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவற்றில் மிகச் சிறந்து விளங்குவோருக்கும், பொறியியல் கல்வியில் பொருத்தமான இடங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்போருக்கும் என்ஏஇ அகாடமி உறுப்பினர் பதவி அளித்து கெளரவிக்கிறது. புதிய மற்றும் வளரும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னோடியாக இருத்தல், பாரம்பரிய பொறியியல் துறையில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்துதல், பொறியியல் கல்வியில் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்களிப்பை வழங்குவோரும் இந்த உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ரெனால்ட் நிஸ்ஸான் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!