சென்னை:பக்கவாதம், மூட்டுவலி, பெருமூளைவாதம், பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் தசைக் கூட்டு நிலை நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தோள்பட்டை அல்லது முழங்கையில் மூட்டு இயக்கத்திற்கான பயிற்சி அளிக்க தனித்தனியாக, 'அரிபோ' என்னும் ரோபோவை சென்னை ஐஐடி உருவாக்கிவருகிறது.
இதனை உருவாக்க சென்னை ஐஐடி ரோபோடிக்ஸ் மோஷன் டெக்னாலஜி நிறுவனமான 'போர்டெஸ்கேப்' உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சமூகப் பொறுப்புணர்வு நிதி திட்டத்தில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலகத்தால் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், கை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு புதுமையான அரிபோ (AREBO - Arm Rehabilitation Robot) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அரிபோ என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ரோபோவாகும். பக்கவாதம், மூட்டுவலி, பெருமூளைவாதம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் மற்றும் தசைக் கூட்டு நிலையில் இருப்போருக்கு தோள்பட்டை அல்லது முழங்கையில் மூட்டு இயக்கத்தை இந்த ரோபோ தனித்தனியாக பயிற்றுவிக்கும், நோயாளியின் இடது அல்லது வலது கையுடன் இணைக்க செய்ய 'அரிபோ' ரோபோவின் வடிவமைப்பு உதவுவதுடன், கைக்கு பாதுகாப்பான பயிற்சியும் அளிக்கச் செய்கிறது.
சென்னை ஐஐடி-யின், மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதனங்கள் மேம்பாட்டிற்கான டிடிகே மையத்தின் தலைமைப் பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன், வேலூர் சி.எம்.சி.யின் சிவக்குமார் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்படும் இத்தகைய கண்டுபிடிப்புகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் விதமாக உள்ளது.