தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைகளை அள்ளிக் கொடுக்கும் முதலீடுகள் - செமிகண்டக்டர் கொள்கை குறித்து ஐஐடி இயக்குநர் விளக்கம் - ஹைட்ரஜன் எரிசக்தி

semiconductor policy: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய செமிகண்டக்டர் கொள்கையால் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடு வரும் எனவும் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

semiconductor policy
செமிகண்டக்டர் கொள்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:09 PM IST

செமிகண்டக்டர் கொள்கை

சென்னை: தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நேற்றும் (ஜன.07) இன்றும் (ஜன.08) சென்னையில் நடத்துகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ் எலக்ட்ரானிக்ஸ் கொள்கை 2024யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.07) வெளியிட்டார்.

அதில் கார் முதல் மொபைல் போன் வரையில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதற்கான கொள்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கமாக செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ் எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையில் தமிழகத்தை உச்ச நிலைக்கு உயர்த்தவும், அதன் மூலம் உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையின் மூலம் 2030க்குள் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிக்கவும் 2030க்குள் இந்தத் துறையில் 2,00,000 நபர்களைக் கொண்ட திறமையான குழுவை உருவாக்கவும் மேலும், தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடிக்கும் திறன் மிகுந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள செமிகண்டக்டர் கொள்கை குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறும்போது, "இந்தியாவிற்கு செமிகண்டக்டர் கொள்கை முக்கியமானது. நாம் பயன்படுத்தும் மொபைல், மைக் உள்ளிட்ட எல்லாவற்றிலும் செமிகண்டக்டர் இருக்கிறது. இது மிகப் பெரும் நுகர்வோர் சந்தையாகவும் உள்ளது.

அதனால் இந்தியா செமிகண்டக்டர் கொள்கை எதைச் செய்ய வேண்டும் எனவும், எவ்வளவு நாட்களுக்குள் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசு நேற்று (ஜன.07) வெளியிட்ட கொள்கை ஒருங்கிணைந்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கி உள்ளனர். தற்போது அறிவித்துள்ள இந்த கொள்கையினால் மேலும் அதிகளவில் முதலீடு கிடைக்கப்படும்.

நாம் பேட்டரியை கூறி வருகிறோம். ஒரு காலத்தில் பிளாஸ்டிக் போல் பேட்டரியை அழிக்கவும் திண்டாடுவோமா? என்ற கேள்வி உள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய கரியை எரிப்பது குறித்தும் கவலை உள்ளது. எனவே கிரீன் ஹைட்ரஜன் எரிசக்தி குறித்து ஐஐடியில் உள்ள பேராசிரியர்கள் ஆய்வு செய்து ஹைட்ரஜன் பயன்பாட்டை மேம்படுத்த உள்ளோம்.

இதற்காக தமிழ்நாடு அரசு, சென்னை ஐஐடி மற்றும் ஹுண்டாய் மூன்றும் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரஜன் கார் வைத்துள்ளனர். அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஹைட்ரஜன் பயன்படுத்துவதில் முன்னிலை மாநிலம் என வர வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கும் உள்ளது. அந்தப் பெருமையை தமிழ்நாட்டிற்குச் சேர்க்க வேண்டும் என்பதும் எங்களின் குறிக்கோளாக இருக்கிறது.

மின்சார வாகனத்தைப் பயன்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்சார வாகனத்தைப் பயன்படுத்துபவர்கள் வழியில் நின்று விடும் என அச்சம் கொள்கின்றனர். எனவே ஏடிஎம் மையங்களைப் போல் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதியையும் உருவாக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த கோவை ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details