சென்னை: ஐஐடியில் மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கருத்தரங்கம் இயக்குநர் காம கோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழுமத்தின் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு அளிக்கப்படும் மன நல ஆலோசனைகள் குறித்தும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ”சென்னை ஐஐடியில் தற்கொலைகளை பொறுத்தவரை, ஐந்தில் மூன்று பேர் படிப்பில் நன்றாக இருந்தவர்கள் தான். பொதுவாக தற்கொலைகளுக்கு என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். அவர்களின் சிறுவயது பிரச்சனை, உடல்நலம், பொருளாதாரப் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை இதில் எது இருந்தாலும் அதனுடன் சேர்ந்து படிப்பும் அவர்களுக்கு அழுத்தமாக மாறி உள்ளது. கரோனா தொற்றுக்குப் பிறகு அனைத்து மாணவர்களும் ஒன்றாக கூடுவது குறைந்துவிட்டது. அதனை சரி செய்ய முயற்சி செய்கிறோம். மன நலம் சார்ந்த சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்தில் 25 சதவீதம் பேருக்கு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேரில் 600 பேருக்கு மன அழுத்தம் உள்ளது. அதனைக்கண்டறிவது தான் சவால். 6 வாரங்களுக்குள் முழுவதும் முடித்து விடுவோம். இந்த சர்வே இயக்குநர், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் நடத்தப்படுகிறது. சென்னை ஐஐடியில் பாகுபாடு காரணமாக மன அழுத்தம் என்பது இதுவரை இல்லை. ஆசிரியர்கள் அளவில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவது இல்லை.
ஐஐடியில் சேர்வதற்காக நடத்தப்படும் JEE தேர்வினை எழுதி தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை ஐஐடியில் சேர்கின்றனர். அவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகள் வழங்கப்படும். ஆனால், ஆசிரியர்கள் யாரும் மதிப்பெண் விவரங்களைக் கேட்பது இல்லை. மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவில் இருந்து அவர்களின் மதிப்பெண்கள் தெரியும். அதிக மதிப்பெண்கள் பெற்று சேர்ந்த மாணவர்களில் 60 ஆண்டுகளில் 3 பேர் மட்டுமே விருதுகளைப் பெற்று உள்ளனர்.
ஐஐடியில் சேர்ந்தப் பின்னர் எந்த மாணவரிடமும் மதிப்பெண்கள் குறித்த பாகுபாடு காட்டப்படுவது இல்லை. சாதிய ரீதியான பாகுபாடும் காட்டப்படுவது இல்லை. சென்னை ஐஐடியில், ஆராய்ச்சி மாணவர் தற்கொலை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சபீதா, கண்ணகி பாக்கியநாதன், ஐஐடி பேராசிரியர், மாணவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.