சென்னை:சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற ஆராய்ச்சி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், சென்னை ஐஐடியில் பிடெக் முன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாணவர் வைபு புஷ்பக் இன்று (மார்ச்.14) தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரியர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. தற்கொலைக் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடியில் தொடரும் தற்கொலை சம்பவங்கள் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "சென்னை ஐஐடியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும், பிடெக் எல்க்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது வருத்தமாக இருக்கிறது.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐஐடியின் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு மாணவர்களின் பிரச்சனைகளை கேட்டு வருகிறோம். மாணவர்களின் பிரச்சனைகளை கூறினால், அதனை தீர்த்து வைத்து வருகிறோம். மேலும் சக மாணவர்கள் மூலமாக தெரிய வந்தாலும் மாணவருக்கு உளவியல் ரீதியாகவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஆந்திராவை சேர்ந்த மாணவர் இன்று காலை வரையில் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாக கண்டறிய முடியவில்லை. காலை சக மாணவர்கள் வகுப்பிற்கு சென்றபோது, அவரையும் கேட்டுள்ளனர். மாணவர் இன்று வகுப்பிற்கு வரவில்லை என கூறியுள்ளார். பின்னர் சக நண்பர்கள் காலை சுமார் 11 மணி அளவில் அறைக்கு வந்து பார்த்தபோது மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக நண்பர்கள் உயிர் இருப்பதாக நினைத்து காப்பாற்ற முயன்றுள்ளனர்.