சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப் பொருட்களாகத் தயாரிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளனர்.
நெல் கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறையினர் எரிசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது. வட இந்தியாவில் வைக்கோல் எரிப்பு மற்றும் இதர பண்ணைக் கழிவுகள் எரிப்பதைக் குறைக்க இந்த அணுகுமுறை முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
கரிமக் கழிவுகள், குறிப்பிட்ட சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு மின்தேக்கிகளில் முக்கிய உதிரிபாகமாகப் பயன்படுத்தப்படும் செயல்படுத்தப்பட்ட கார்பனை உருவாக்குவதன் மூலமாக புதிய பண்ணை ஆற்றல் ஒருங்கியக்கத்தை (Farm-Energy Synergy) தங்கள் பணியின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நெல் கழிவுகளில் கிடைக்கும் செயல்படுத்தப்பட்ட கார்பனால் தயாரிக்கப்படும் சிறப்பு மின்தேக்கிகள், மின்னணுவியல், எரிசக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதுடன், சிறப்பு மின்தேக்கிகள் துறையில் தற்சார்பை வளர்க்கவும் உதவுகின்றன.
சிறப்பு மின்தேக்கிகள் மற்றும் அதன் அடிப்படையிலான எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் தற்சார்பை எட்டுவதன் வாயிலாக அறிவுசார் சொத்துரிமைப் பதிவு, வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு 760 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கழிவுகள் சேர்கின்றன. வைக்கோலை மண்ணுக்குள் செலுத்த அதனை எரிப்பதுதான் சிக்கனமான, பொருத்தமான தீர்வாக விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் கணிசமான அளவுக்கு மாசுபாட்டையும், கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஏற்படுகிறது. மேலும், உயிரி எரிப்பின் சாத்தியமான பயன்பாடும் குறைகிறது. பண்ணைக் கழிவு மேலாண்மையை இவ்வாறு கையாள்வதால் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 92,600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
காய்கறிக் கழிவு போன்ற உயிரி எரிபொருட்களை உயிரி கழிவுகளாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பயன்படுத்தி, சிறப்பு மின்தேக்கிகளுக்கான மின்முனைப் பொருட்களை (supercapacitor electrode materials) தயாரிக்கலாம் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு, நெல் கழிவுகளில் இருந்து செயல்படுத்தப்பட்ட கார்பனை உற்பத்தி செய்யலாம். செயல்படுத்தப்பட்ட கார்பனை உருவாக்கவும், உற்பத்தி அளவை ஆராயவும் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்வது என்பதுதான் எதிர்காலத் திட்டமாகும்.