சென்னை:இன்றைய காலக்கட்டங்களில் டிஜிட்டலின் பன்முகத்தன்மை கணிசமாக எல்லாத் துறைகளிலும் பரந்து கிடக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு விடியலையும் புதுப்புது கண்டுபிடிப்புகளுடன் மக்கள் வாழ பழகுகின்றனர். அந்த வகையில் மனிதனின் அற்புத கண்டுபிடிப்புகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் ஒன்றாகும்.
மேலும் இதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் மனித இயல்புகளை எளிதாக்கவும் ஒரு புதிய கண்டுபிடிப்புடன் முன்வந்துள்ளனர் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். கிராமப் புறங்களில் உள்ள பள்ளி மாணவர்ககளுக்கு பயன்படும் வகையில் ஏஆர் மற்றும் விஆர் (ஆக்மெண்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி) அடிப்படையிலான கற்றலை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் மாதிரிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறும் வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை உருவாக்குவதாகும். ஆக்மெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகை உருவாக்குதல் டிஜிட்டல் முறையிலான கதை சொல்லுதல் விளையாட்டுகள் ஆகியவற்றால் கற்றல் செயல்முறை மேலும் வலுப்பெறும். அத்துடன் மாணவர்கள் உயர்கல்வி என்ற போட்டி மிகுந்த களத்திற்கு தங்களை தயார் செய்துக் கொள்ள உதவியாகவும் இருக்கும் எனற் தெரிவிக்கப்பட்டுள்ளது.