தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்தான காதலிக்கு வாழ்க்கை கொடுக்க மூதாட்டியிடம் கைவரிசை!

சென்னையில் விவாகரத்தான காதலிக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காக, தனியாக இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடித்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விவாகரத்தான காதலிக்கு வாழ்க்கை கொடுக்க எண்ணி மூதாட்டியிடம் கைவரிசை!
விவாகரத்தான காதலிக்கு வாழ்க்கை கொடுக்க எண்ணி மூதாட்டியிடம் கைவரிசை!

By

Published : Feb 7, 2023, 9:39 AM IST

சென்னை:கிண்டி ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்தவர் சொர்ணாதேவி. இவருக்கு 10 வீடுகள் உள்ள குடியிருப்பு உள்ளது. இதில் கீழ்த்தளத்தில் வீடு காலியாக இருந்துள்ளதை அறிந்த 2 பேர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை 10 மணியளவில் வீடு வாடகைக்கு கேட்பதற்காக வந்துள்ளனர்.

வாடகை மற்றும் முன்பணம் குறித்து இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மூதாட்டியை அறைக்குள் தள்ளிய இருவரும், அவரின் வாயை அடைத்து, கத்தியை காட்டி மிரட்டி, மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் தங்க நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இருவரும் மூதாட்டியின் காலில் விழுந்து, பணத்தேவைக்காகக் கொள்ளை அடிப்பதாகக்கூறி மன்னிப்பு கேட்டு விட்டு, வீட்டை வெளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் தெளிவடைந்த மூதாட்டி, இது குறித்துக் கிண்டி காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து அதில் பதிவான உருவத்தை வைத்து தேடினர்.

ஆனால், அவை பலனளிக்காததால், அந்த நேரத்திலிருந்த செல்போன் அழைப்புகளை வைத்து குற்றவாளிகளைக் கோயம்புத்தூர் சென்று கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவையைச் சேர்ந்த அஜீத் மற்றும் பிரபு என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அஜீத்துக்குத் திருமணமாகி 10 மாத குழந்தை ஒன்று உள்ளது. அஜீத்தின் தாய் டிபி நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலிருந்து வருவதாகவும், பிகாம் பட்டதாரியான இவருக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில் அவரது அம்மாவின் மருத்துவச் செலவிற்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டதால், பலரிடம் பண உதவிக்கேட்டுக் கிடைக்காமல் போனதால் கோவை பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தபோது, ‘நண்பர் ஒருவர் நல்ல வீடாக பார்த்து கொள்ளை அடிக்கலாம்’ என விளையாட்டாகத் தெரிவித்துள்ளார்.

அதனைக்கேட்ட அஜீத் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளார். மேலும் தன்னுடன் லோடு மேனாக இருக்கும் பிரபுவுக்கும் 70,000 ரூபாய் கடன் இருப்பதால் அவரையும் உதவிக்கு அழைத்துள்ளார். மேலும் உள்ளூரில் கொள்ளை அடித்தால் சிக்கிக் கொள்வோம் என்று, ஏற்கனவே அவரது மனைவி பணிபுரிந்த கிண்டி ஈக்காட்டுதாங்கலைத் தேர்ந்தெடுத்து 15 நாட்களாக நோட்டம் விட்டு, அந்த வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அதேநேரம் கொள்ளை அடித்தால் காவல் துறையினரிடம் எளிதாக சிக்கிக் கொள்வோம் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் பிரபு வேறு மதத்து பெண்ணை விரும்பி அந்த காதல் கைகூடாத நிலையில், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால், அப்பெண்ணுக்குத் திருமணமாகி விவாகரத்தாகி விட்டதால், அந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க தனது 70,000 ரூபாய் கடனை அடைத்து விட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து நல்ல படியாக வாழலாம் என கனவு கண்டதாகப் பிரபு கூறியுள்ளார். தொடர்ந்து இவர்களிடம் இருந்து 8 சவரன் நகையைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இதையும் படிங்க:துணிவு’ படத்தைப் பார்த்து வங்கி கொள்ளை முயற்சி - 19 வயது இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details