சென்னை: தமிழ்நாடு கோயில்களுக்கு அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (பிப்ரவரி 21) விசாரணைக்கு வந்தபோது, கோயில் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரமில்லை எனவும் மனுதாரர் வாதிட்டார்.
அறங்காவலர்கள் நியமனம் வழக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோயில்களில் 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
கோயில் அறங்காவலர்கள் நியமனம் வழக்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அறங்காவலர் நியமனம் தொடர்பான நடைமுறைகளில் சுணக்கம் ஏற்பட்டதாகக் கூறிய அரசு தலைமை வழக்கறிஞர், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்கள் நியமிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால், கோயில் நலனைக் கருதி அயல் பணியில் அறநிலையத் துறை ஊழியர்களைத் தற்காலிகமாக நியமித்ததில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை எனத் தெளிவுப்படுத்தினர்.
அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பதாகவும், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!