தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை’ - சென்னை உயர் நீதிமன்றம் - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை: சிபிஎம், சிபிஐ கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை எனத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 1, 2021, 7:00 PM IST

சென்னை அண்ணாசாலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் 10ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது, பொது மக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான குற்றப் பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஎம் பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் குமார், சிபிஐ மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வருகின்ற ஜுன் 7ஆம் தேதி ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்குத் தடைவிதித்து வழக்கை ரத்து செய்யக்கோரி நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார். மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தே மனுதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர் வாதிட்டார். இதையடுத்து ”அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை; கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல” எனக் கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : கறுப்பு பூஞ்சை சிகிச்சை: ஒன்றிய அரசை கேள்விகளால் துளைக்கும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details