தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் இடஒதுக்கீடு - தடை விதிக்க மறுப்பு

வன்னியர் இடஒதுக்கீடு - தடை விதிக்க மறுப்பு
வன்னியர் இடஒதுக்கீடு - தடை விதிக்க மறுப்பு

By

Published : Aug 25, 2021, 1:04 PM IST

Updated : Aug 25, 2021, 2:05 PM IST

12:54 August 25

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டுள்ளது.  

1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் ஏற்கனவே சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது அமல்படுத்தப்பட்டுள்ளதால், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய ஜாதிகளை அடையாளம் காண்பது, பட்டியலில் சேர்ப்பது போன்றவற்றிற்கு குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இதுதொடர்பாக  சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் வாதிட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர், மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க அரசுக்கு பரிந்துரைத்ததாகவும், ஏற்கனவே வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உள்ளதால் கல்வியில் தனி இடஒதுக்கீடு தொடர்பாக தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தற்காலிக மாணவர் சேர்க்கை என எதுவும் இல்லாததால், இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 20 விழுக்காடு மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும், பணி நியமனத்தை பொறுத்தவரை, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உச்ச நீதிமனறத்தில் தடை உத்தரவு பெற முயற்சி நடந்துள்ளதால், ஆரம்ப நிலையில் தடை உத்தரவு கோர முடியாது  என்றும், சில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க :HBD விஜயகாந்த் - யாரையும் மூழ்கடிக்காத கேப்டன்

Last Updated : Aug 25, 2021, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details