சென்னை: அரியலூர் மாவட்டம், அன்னிமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தமும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தமயந்தியும் 2001இல் காதல் திருமணம் செய்துகொண்டனர். வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் தமிழமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தன்னை புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், மேலும் சட்டவிரோதமாக, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி, முருகானந்தம், அவரது பெற்றோர், சகோதரர் உறவினர்களுக்கு எதிராக, தமயந்தி, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகானந்தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத் தொகையை தமயந்திக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது. அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.