சென்னை:தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதச் சக்கரவர்த்தி அமர்வில் இன்று(ஜூன் 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்நிய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் பரவியுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கும், இந்த அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடந்து வருவதாகவும், இதுதவிர ரசாயன முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்நிய மரங்களை அகற்ற ரூ.5.36 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..?' என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.