ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி சேஷசாயி, முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், போயஸ்தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் உடைமைகள் மட்டுமல்லாமல், தங்கள் பாட்டியின் உடைமைகளும் இருப்பதாகவும், ஜெயலலிதா பயன்படுத்திய கார்களின் நிலை பற்றி அரசு அறிவிக்கவில்லை என கூறினார். ஜெயலலிதாவின் கார்கள், பொருட்கள் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்ஜிஆர் வீடுகள் நினைவில்லமாக மாற்றியதைப் போல ஜெயலலிதாவின் வீட்டையும் மாற்ற முடிவு செய்ததாகவும், வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை என தெரிவித்தார்.
எந்த வகையிலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்றும், மூன்று ஆண்டுகளாக கையகப்படுத்த நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு மனுதாரர்களின் வசம் தற்போது இல்லை என்றும், அரசின் வசம் உள்ளதாகவும், நாளை திறந்து நினைவு இல்லமாக அறிவிக்கப் போவதாகவும் விளக்கம் அளித்தார்.