சென்னை: கடந்த 2018-யில் தமிழன்பன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
கழிவுநீர் கால்வாய்கள் மூடப்படும்:கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற எல்லைக்கு அருகில் உள்ள பகுதியை சிறுநீர் கழிப்பதற்காகவோ அல்லது கழிப்பறைக்காகவோ பயன்படுத்துவதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, உயர் நீதிமன்றத்தின் எல்லைச்சுவர்களை இயற்கை உபாதைகளைக் கழிக்க பயன்படுத்துவதைத்தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கழிவுநீர் கால்வாய்களை மூடப்படாமல் இருந்தால், அவற்றை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.