சென்னை:அரசு மருத்துவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், கடந்தாண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 118 மருத்துவர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவர்களை தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்தும், அவர்களை சாதாரண பதவியில் அமர்த்தியும் பழிவாங்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
அதன்படி, சில மாதங்களுக்குப் பிறகு இடமாறுதல் செய்யப்பட்ட அரசு மருத்துவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சிலரை மட்டும், அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கு மாற்றாமல், அருகிலுள்ள மாவட்டங்களுக்கு அரசு இடமாற்றம் செய்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி பழைய இடத்துக்கு மாற்றிய அரசு, மூத்த மயக்கவியல் நிபுணரான தன்னை ஜூனியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் நியமனம் செய்துள்ளதாகக் கூறி, மருத்துவர் செய்யது தாஹிர் ஹூசைன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கு தொடர்பாக, செப்டம்பர் நான்காம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:’கால்நடை மருத்துவர்கள் பணி விரைவில் நிரப்பப்படும்’ - உடுமலை ராதாகிருஷ்ணன்