சென்னை:சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேந்தவர்கள் சத்தியா, சிவகுமார். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் என்பவர் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் சத்தியா-ரமேஷ் தம்பதிக்கு திருமணமாகி நீண்ட நாள்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சிவகுமார் - சரண்யா தம்பதி, தங்களது மூன்றரை வயது குழந்தையை, கடந்த 2012 ஆம் ஆண்டு, சத்தியா தம்பதிக்கு தத்துக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, சத்தியாவின் கணவர் ரமேஷ், புற்றுநோயால் உயிரிழந்தார். கணவனை இழந்த சத்தியா, தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை-ஐ, கேட்டுள்ளார். ஆனால் குழந்தையை கொடுக்க மறுத்த சிவகுமார் தம்பதி மீது, சத்தியா, அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் காரணமாக, சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் குழந்தையை ஒப்படைக்கக் கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் நீதிபதி மஞ்சுளா அடங்கிய அமர்வு, சிறுமியிடம் விசாரித்த போது, இருவரும் வேண்டும் என்று சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, வளர்ப்பு தாயிடமே குழந்தை வளர்ந்து தற்போது சிறுமி ஆகிவிட்டதால் வளர்ப்புத்தாய் வளர்க்க வேண்டும் என்று கூறி, சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெற்ற தாயை வாரம் ஒருமுறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு