ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து முராரி கமிஷன் உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும், மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, களங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த 7 மாதங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மீனவர்களுக்கு கடற்கரை ஓரத்திலேயே அடுக்குமாடி வீடு கட்டி கொடுத்துவிட்டு, சாலையை ஆக்கிரமித்து அவர்கள் வியாபாரம் செய்வதாக அவர்கள் மீதே எப்படி குற்றம் சாட்டமுடியும். நீதிமன்றம் உத்தரவிட்ட 7 மாதத்தில் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பினர்.
மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 1,300 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 300 பேருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.