சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்டத்தின் படி அவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது. இந்த பட்டாவை ரத்து செய்யக் கோரி, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளார். கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என குறிப்பிட்டு, இந்த தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் மோகனுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், எல்லாருடைய வாழ்க்கையும் கடவுளின் ஒரு வரம், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல வண்ண அழகிய காகிதங்களால் சுற்றப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை மட்டும் பல நூற்றாண்டுகளாக பாரபட்சம் கொண்டதாகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் நிலையை தெரிவிக்க முடியாததால் இந்த சமுதாயத்தால் மிக மோசமாகவும், சொந்த குடும்பங்களாலும் இரக்கமின்றியும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.