தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைத்து அடுத்தாண்டு முதல் செயல்படுத்த உத்தரவு

நீட் தேர்வு
நீட் தேர்வு

By

Published : Mar 23, 2021, 1:11 PM IST

Updated : Mar 23, 2021, 2:47 PM IST

13:05 March 23

சென்னை: மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும். இதனை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-22ஆம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஏப்ரல் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டன. இதனால் இந்தத் தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களிலிருந்து நீக்கப்பட்டன. 

இதனை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் என்பவர் தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்தார். 

“தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநிலத் தேர்வு மையங்களையே தேர்வுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களைத் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும். இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க, தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால், மற்றவை என்று குறிப்பிட்டால் போதும். 

பின்னர் அதனைப் பரிசீலித்து மாணவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்வு வாரியம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு முதல் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கு: விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும்!

Last Updated : Mar 23, 2021, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details