சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிவரும் எம்.எம். சுந்தரேஷ் (59) உள்ளிட்ட ஒன்பது பேரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைசெய்திருந்தது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நீதிபதி எம்.எம். சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1962ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர் எம்.எம். சுந்தரேஷ். அவரது தந்தை முத்துசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த எம்.எம். சுந்தரேஷ், கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தார். சென்னையில் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து, வழக்கறிஞராகக் கடந்த 1985ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார்.
பின்னர், தனது வாதத்திறமையால் அரசு வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.